Thursday, 21 March 2024

ரிதுராஜின் எழுச்சி


ரிதுராஜ் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால் 2019 ஐபிஎல்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். 2019ல் சீனியர் வீரர்கள் இருந்ததால் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை.
2020 ஐபிஎல்ல் 6 போட்டிகளில் மட்டுமே ஆடினார்.
அந்தத் தொடரில் சிஎஸ்கே கேப்டன் தோனி இளம் வீரர்களிடம் அணியில் இடம் பெறக்கூடிய அளவுக்கு ஸ்பார்க் இல்லை என்றார்.


2021 ஐபிஎல் ரிதுராஜ் எல்லா போட்டிகளிலும் ஆடினார். அதிக ரன்கள் குவித்த வீரர்களுக்கு கிடைக்கும் ஆரஞ்சு தொப்பியை பெற்றார்.
2021 ல் சென்னை அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார்.

2021ல் தவான் தலைமையில் இலங்கைக்கு சென்ற இரண்டாம் கட்ட அணியில் இடம் பிடித்தார் ரிதுராஜ். அணி வீரர்களில் நிறைய பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட, ரிதுராஜ்க்கு ஆடும் 11ல் வாய்ப்பு கிடைத்தது.


2022 ஐபிஎல்ல் அதிக ரன்கள் குவித்தோரில் 20வது இடத்தை பெற்றார். தென்னாப்பிரிக்கா எதிரான போட்டியில் முதல் சர்வதேச டி20 அரை சதத்தை அடித்தார்.


2023 ஐபிஎல்ல் அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் நான்காம் இடத்தைப் பிடித்தார். சென்னை அணி கோப்பையை வென்றது.
பும்ரா தலைமையில் அயர்லாந்து சென்ற டி20 அணிக்கு துணைக் கேப்டன் ஆனார். உலகக் கோப்பைக்கு முன்பாக நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு  எதிரான ஒருநாள் தொடரில் முதல் அரை சதம் அடித்தார்.


உலகக் கோப்பையின் போது நடைபெற்ற ஆசியப் போட்டிகள் தொடருக்கு இந்திய அணி கேப்டன் ஆனார். அந்தத் தொடரில் இந்தியா தங்கம் வென்றது.
உலகக் கோப்பை முடிந்த பிறகு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சதமடித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 போட்டியில் சதமடித்த முதல் இந்தியர் ஆனார்.

Ruturaj Gaikwad - Crictoday
விஜய் ஹசாரே போட்டியில் ஒரே ஓவரில் 7 சிக்ஸ் அடித்துள்ளார் (ஒரு நோபால்) ரிதுராஜ்.
தற்போது தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பதவியை ரிதுராஜிடம் ஒப்படைத்துள்ளார்.

 

-S. Palani Selvakumar

Wednesday, 20 March 2024

நானும் கிரிக்கெட்டும் - 1

 

எங்க ஊருல கிரிக்கட்டு

 

தூத்துக்குடி வழக்கும் திருநெல்வேலி வழக்கும் இல்லாத நடுவுல உள்ள ஊரு எங்க ஊரு.

 

எவம்ல அது, ஜன்னல்ல தொங்குறதுஎன்று வந்து ஜன்னல் கதவை முகத்தில் அறைந்துவிட்டுப் போகும் ஊர்ப் பணக்கார வீட்டுக்காரர் டிவியைப் பார்க்க, அடுத்த மேட்ச் அப்போ போகாமல் இருந்ததில்லை. அப்படி ஒரு ஆர்வம் கிரிக்கெட்டைப் பார்க்க.

 

அப்புறம் நாங்களே தென்னை மட்டையை எடுத்து பேட்டாக மாற்றி விளையாட ஆரம்பித்த பிறகு இன்னும் தீவிரம் ஆனது கிரிக்கெட்டின் மேலான ஆர்வம். அந்த சமயம் அமைந்த நண்பர்கள் கூட்டமும் மிகப் பெரிய காரணம் இதற்கு (அந்த நண்பர்கள்கூட இப்போவும் கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் விளையாட முடிந்தது உபரியான சந்தோசம்).

 

அப்புறம் பஞ்சாயத்து டிவி (மடத்து டிவினு சொல்லுவோம் ஊருல) வந்ததும் வசதி கூடிவிட்டது கிரிக்கெட் பார்க்க. லேட்டா போனா பின்னாடி தான் உக்கார இடம் கிடைக்கும், அங்க இருந்து பாத்தா அந்த சின்ன டிவில பேட் பிடிக்கிறவன் மூஞ்சியே தெரியாது என்பதால் மேட்ச் ஆரம்பிக்க சில பல மணி நேரம் முன்னமே சீக்கிரம் வந்து முன்பகுதியில் இடம் பிடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.

 

இங்க ஒரு முக்கியமான விஷயம் என்னனா கிரிக்கெட் பாக்க இந்த டிவி முன்னாடி உக்காரும்போது பக்கத்துல உயர் (பணக்கார) சாதிப்பையன் இருந்தாலும் நாமளும் சமமா உக்கார முடியும். இதுவே அவன் வீட்டுக்குப் போகும்போது உக்காரக் கூட விடமாட்டாங்க. அந்த அளவுக்கு கிரிக்கெட் பாக்குறது ஒரு ஏற்றத்தாழ்வை விலக்கியது எங்கள் ஊரில். பின்னாட்களில் அந்தப் பசங்க கூட சரிக்கு சமமா விளையாடவும் வழிவகை செய்தது இந்தக் கிரிக்கெட்.

 

மைக்கேல்ராஜ்

Tuesday, 19 March 2024

அரவிந்த டி சில்வா

 2023 ஆம் ஆண்டின் ஐசிசி ஹால் ஆப் பேம் விருது அரவிந்த டி சில்வாவுக்கு.

யார் இந்த அரவிந்த டி சில்வா ??


இன்றைய காலகட்டத்தில் ஒரு பேட்ஸ்மேன் அடித்த ரன்கள், சதங்கள், ஸ்ட்ரைக் ரேட் ஆகியவைகளை வைத்து அவரை நல்ல பேட்ஸ்மேன் என்று சொல்கிறோம். இது சில இடங்களில் சரியாக அமைந்தாலும், இன்னும் சில இடங்களில் சரியாக அமைவது இல்லை.

 1984 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனவர் தான் இந்த அரவிந்தா.  அந்தக் காலகட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணி மிகவும் பின்தங்கிய அணி. அந்த அணியில் விளையாடிய வீரர்கள் யாரும் ப்ரொபஷனல் கிரிக்கெட் வீரர்  கிடையாது. அவர்கள் எல்லாரும் பகுதி நேர கிரிக்கெட் வீரர்கள்  தான். ஏதாவது தனியார் அலுவலகங்களில் வேலை பார்த்துக் கொண்டு இருப்பார்கள். கிரிக்கெட் போட்டித் தொடர் வரும் போது அனைவரும் ஒன்று சேர்ந்து சில காலம் பயிற்சி மேற்கொண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட வருவார்கள். அவர்களுக்கு ஸ்பான்சர்ஷிப் இருக்காது. ஆகவே விளையாடத் தேவையான உபகரணங்கள் அவர்களுக்கு போதுமானதாக இருக்காது. ஒருவர் அவுட் ஆகி வெளியே வரும் போது அவரின் க்ளோவ், ஹெல்மெட், பேட் என்று எல்லாவற்றையும் கழட்டிக் கொடுப்பார். அதை புதிதாக களம் இறங்கும் வீரர் அணிந்து கொண்டு பேட்டிங் செய்ய வருவார். அவர்களுக்கு போதுமான பயிற்சியாளர் கிடையாது. இது தான் அன்றைய இலங்கை கிரிக்கெட் அணி. அந்த அணியில் விளையாடிய வீரர் தான் அரவிந்த டி சில்வா. 1984 ஆம் ஆண்டில் இருந்து 2003 உலக கோப்பை வரை அணியில் இருந்தார். இந்த 19 ஆண்டுகளில் 3 ஆண்டுகள் ( 1999 - 2003 )  அவர் அணியில் இல்லை. இலங்கை கிரிக்கெட் போர்டுடன் ஒரு கருத்து வேறுபாடு காரணமாக அவர் கிரிக்கெட்டை தவிர்த்து விட்டார். தனது 19 ஆண்டு சர்வதேச  கிரிக்கெட் அனுபவத்தில் கிட்டத்தட்ட 60 சதவீத காலம் அவர் பகுதி நேர கிரிக்கெட் வீரர் ஆக தான் இருந்தார்.

பல ஆண்டுகளாக , பல காலகட்டங்களில் கிரிக்கெட்டை ஆராய்பவர்கள் பலர் சொல்லும் ஒரு கருத்து . " இலங்கை கிரிக்கெட் அணி உருவாக்கிய தலை சிறந்த பேட்ஸ்மேன் அரவிந்த டி சில்வா தான். அவர் எந்த பந்து வீச்சையும் எளிதாக எதிர் கொள்வார்".

1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் அரை இறுதி மற்றும் இறுதி போட்டி என்று இரண்டு போட்டிகளிலும் ஆட்ட நாயகன் விருதை வாங்கியவர். 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை  போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடிய போது 92 ரன்களை எளிதாக விளாசி சென்றார். பிரெட் லீயின் 150 கிலோ மீட்டர் வேகப்பந்தை அவர் இரண்டு முறை சிக்ஸர்களாக மாற்றிய ஷாட்டை  பிரெட் லீ இன்றுவரை மறக்க வாய்ப்பில்லை. இந்தியாவின் மிக சிறந்த பந்து வீச்சாளரான கும்ப்ளேவை மிக எளிதாக எதிர்கொள்ளும் வீரர் இவர். 2003 ஆம் ஆண்டு அரை இறுதிப் போட்டியில் மெக்ராத்தை மிக எளிதாக எதிர்கொண்டு விளையாடிய போது, ஆண்டி பிக்கேல் பந்து வீச்சில் ரன் அவுட் ஆகி சென்றார் அரவிந்தா.  1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரை இறுதி போட்டியில் முதல் ஓவரில் ஜெயசூரியா மற்றும் களுவிதரனா இருவரும் அவுட் ஆனதும் வெற்றி நமக்கே என்று நினைத்த இந்திய அணியை வெளுத்து வாங்கினார் அரவிந்தா. அவர் அந்தப் போட்டியில் மிக வேகமாக அடித்த 60 + ரன்கள் தான் இந்தியாவின் தோல்விக்கு அடித்தளம் இட்டது. 


1995 ஆம் ஆண்டு, ஆறாவது வீரராக களம் இறங்கும் ஜெயசூரியாவை ஓபனிங் இறக்கி பார்க்கலாம் என்ற முடிவை எடுத்தவர்கள் அந்த அணியின் கேப்டன் ரணதுங்கா, அணியின் பயிற்சியாளர் வாட்மோர் மற்றும் அணியின் சீனியர் வீரர் அரவிந்தா தான்.

அரவிந்த டி சில்வா அடிக்கும் கவர் டிரைவ், சச்சின் டெண்டுல்கர் அடிக்கும் கவர் டிரைவ் இரண்டும் ஒரே மாதிரி இருக்கும். புல் ஷார்ட் மற்றும் ஹூக் ஷார்ட் எல்லாம் அடிக்கபடாத காலத்தில் அந்த ஷாட் களை எல்லாம் எளிதாக, முன்னணி பந்து வீச்சாளர்கள் பந்தில் அடித்தவர் தான் இந்த அரவிந்த டி சில்வா.

 

இலங்கை அணியின் கேப்டன் ஆக ஜெயசூரியா பொறுப்பு ஏற்ற போது கிரிக்கெட் போர்டுடன் பேசி, 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு அணியில்  அரவிந்த டி சில்வா வேண்டும் என்று கூறியதால், கிரிக்கெட் போர்டு அவரிடம் சமரசம் பேசி அவரை அணியில் விளையாட வைத்தார்கள்.

உலக அரங்கில் சச்சின் டெண்டுல்கர் எப்படியோ , அவருக்கு நிகராக பேட்டிங் திறமை கொண்டவர் தான் அரவிந்த டி சில்வா. ஆனால் அவர் விளையாடிய காலகட்டம் ,  அவர் ஒரு செமி ப்ரொபஷனல் கிரிக்கெட் வீரர், அவர் விளையாடிய அணி, அவருக்கு கிடைத்த குறைந்த  வசதிகள் இவைகளை வைத்து சர்வதேச கிரிக்கெட்டில் 31 சதங்கள் மற்றும் 85 அரை சதங்கள் அடித்தார் இந்த அரவிந்த டி சில்வா. முக்கியமான விஷயம் என்னவென்றால் இவர் ஒரு அதிரடி வீரரும் கூட.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டி. அது 5 ஆம் நாள். இன்னும் 10 ஓவர்கள் தான் மீதி இருக்கிறது. இலங்கை பேட்டிங் செய்து கொண்டு இருந்தது. 6 விக்கெட் விழுந்து விட்டது. அரவிந்த டி சில்வா களத்தில் உள்ளார்.  போட்டியை ட்ராவில் முடித்துக் கொள்ளலாமா என்று இலங்கை கேப்டன் ரனதுங்கா கேட்ட போது , பாகிஸ்தான் அணி தலைவர் வாசிம் அக்ரம், "வேண்டாம். 10 ஓவர்கள் பந்து வீசலாம் தானே. நாங்கள் மீதி இருக்கும் 4 விக்கெட்டை எடுக்க முயற்சி செய்வோம்" என்று சொல்லி விட்டார். இதை கேட்டுக் கடுப்பான அரவிந்த டி சில்வா,  வாசிம் அக்ரம் வீசிய பந்துகளை அடுத்தடுத்து பவுண்டரி அடித்து காட்டினார்.  அதிரடியாக அடிக்க ஆரம்பித்தார்.  சில ஓவர்கள் முடிவில் வாசிம் அக்ரம்,  " நாம் ட்ரா  செய்து விடுவோம்" என்று போட்டியை முடிக்க ஒப்பு கொண்டார்.

சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக திறமை கொண்டவர்.  சங்ககாரா , ஜெயவர்தனே இவர்களை விட சிறந்த பேட்ஸ்மேன். தவறான இடத்தில் இருந்ததால் அன் சங் ஹீரோ ஆகி விட்டார்.

 - ஆண்டனி தினேஷ்

Pc : Internet 

நானும் கிரிக்கெட்டும் - July 2025

அப்போலாம் டீம்ல ஆட இடம் கிடைக்கிறதே பெருசு. ஸ்கூல் விட்டதும் ஓடிவந்து வீட்டுல பையத் தூக்கி எறிஞ்சுட்டு மொத ஆளா சர்ச் மேட்டுக்கு ஓடுவேன். ஏ...