சென்ற மாதம் வெளியான ப்ளு ஸ்டார் படத்தைப் பற்றி கிரிக்கெட் சார்ந்த பார்வை.
சாதியைக் காரணம் காட்டி மைதானத்தில் நுழைய எதிர்ப்பு தெரிவிக்கிறார் ஒரு கிரிக்கெட் க்ளப் மேலாளர் / பயிற்சியாளர். அவர் வேண்டாத சாதியாய் நினைக்கும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் (பிரிந்து இருப்பவர்கள்) ஒற்றுமையாக ஒரே அணியாக சேர்ந்து அந்த கிரிக்கெட் க்ளப் அணியை வெல்வது தான் கதை.
கதாபாத்திர தேர்வைப் பொறுத்தவரை கிரிக்கெட் விளையாடத் தெரிந்தவர்களான அசோக் செல்வன், சாந்தனு, ப்ரித்வி என சிறப்பான தேர்வு. பொதுவாக விளையாட்டு சம்பந்தப்பட்ட படத்தில் கதாநாயகன் அணியின் பயிற்சியாளர் கதாபாத்திரம் ரொம்ப முக்கியம். அந்தப் பாத்திரத்திற்கு பகவதி பெருமாள் சரியாக பொருந்தி இருக்கிறார்.
சாதி ரீதியாக/மத ரீதியாக பிரிந்து கிடக்கும் அணிகள் ப்ளு ஸ்டார் மற்றும் ஆல்பா பாய்ஸ் அணிகள். ப்ளு ஸ்டார் அணியின் கேப்டன் ரஞ்சித் (அசோக் செல்வன்) ஆல்பா பாய்ஸ் அணியின் கேப்டன் ராஜேஷ் (சாந்தனு)
இந்த அணியினர் முறைத்துக் கொண்டு திரிந்தாலும் போட்டிகளில் மோதுவதில்லை. அதற்கான காரணம் ப்ளாஷ்பேக்காக சொல்லப்படுகிறது.
90களின் இறுதியில் பெண்கள் கிரிக்கெட் விளையாடுவது எவ்வளவு பெரிய கனவு என்பதை எளிமையாக சொல்லி இருக்கிறார்.
சென்னையில் டென்னிஸ் பால் கிரிக்கெட்டே கதி என்றிருந்த காலத்தில் அரக்கோணத்தில் கிரிக்கெட் பந்து வைத்து விளையாடி இருக்கிறார்கள் என்ற உண்மையை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
கிரிக்கெட் ரீதியான விசயங்களில் கொஞ்சம் லாஜிக் காட்டி இருக்கலாம். கீப்பராக நின்றால் பேட்ஸ்மேன் உடல்மொழியை உணர்ந்து பீல்டிங் செட் பண்ணுவதாக சொல்கிறார் அசோக். ஆனால் பீல்டிங்கில் அவரது அணி ஏன் கேட்ச்சை விடுகிறது என்ற காரணத்தை கீர்த்தி சொல்லியே தெரிகிறது.
இடைவேளைக்குப் பின் கிரிக்கெட் நிறைந்து இருக்கிறது, மேட்டில் புதிதாக விளையாடுபவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டார்கள் என காட்டி இருக்கலாம்.
அசோக், பிரித்வி, சாந்தனு முக்கிய பாத்திரங்கள் ஓக்கே தான். ஆனால் அவர்கள் மூவர் மட்டுமே விளையாடுகிறார்கள் மற்றவர்கள் சொதப்புகிறார்கள் என்பது எற்புடையதல்ல.
படம் நெடுக மெல்லிய காமெடியும் இணைந்திருப்பதால், வெஸ்ட் இண்டீஸ் அணியை இன்ஸ்ப்ரேஸனாக சொல்கிறாரா? அல்லது உருவக்கேலி செய்கிறாரா? என்ற குழப்பம் வருகிறது.
பிரபல் வர்ணனையாளர்/முன்னாள் கிரிக்கெட் வீரர் சாயலில் அந்த கிரிக்கெட் க்ளப் மேலாளர் எதற்காக, தனிப்பட்ட வன்மமா/பிரச்சனையா என நினைக்க வைக்கிறது?
முழங்கையில் அடிப்பட்ட அசோக் செல்வனுக்கு வலிக்கிறது. இடுப்பு மற்றும் நெஞ்சு பகுதியில் மாறி மாறி அடிவாங்கும் சாந்தனு இயல்பாக இருக்கிறார்.
கிரிக்கெட் லாஜிக்கை, சரியாக கையாண்டு இருந்தால் ப்ளு ஸ்டார் ஒரு ஸ்போர்ட்ஸ் படமாக ஜொலித்திருக்கும்.
-S. Palani Selvakumar