அப்போலாம் டீம்ல ஆட இடம் கிடைக்கிறதே பெருசு. ஸ்கூல் விட்டதும் ஓடிவந்து வீட்டுல பையத் தூக்கி எறிஞ்சுட்டு மொத ஆளா சர்ச் மேட்டுக்கு ஓடுவேன். ஏன்னா லேட்டா போனா, அங்க ஏற்கனவே மேட்ச் ஆரம்பிச்சுட்டானுங்கன்னா, நம்மள சேர்க்கவே மாட்டாங்க அந்த மேட்ச்க்கு. அடுத்த மேட்ச் வரைக்கும் வெயிட் பண்ணனும். வெறும் ஆறு பேரு இருந்தா போதும், டீமுக்கு 3 பேரு வச்சு ஆரம்பிச்சிருவானுங்க. நாம அதுக்குப் பிறகு போயி கேட்டா, அடுத்த மேட்ச்க்கு வாடா நாங்க ஆரம்பிச்சிட்டோம்னு சொல்லுவான். பாத்தா அப்போ தான் மொத ஓவரே போடுவானுங்க.
மேல சொன்னது சர்ச் மேட்டுல ரவுண்ட் கிரிக்கெட்டுக்கு மட்டும் தான். அதுவே பொட்டல்காட்டுல கிரவுண்ட்ல பவுலிங் மேட்ச்னா, எப்போ போனாலும் நம்ம ராஜ்ஜியம் தான். ஆனா அதுலயும் ஒரு சட்ட சிக்கல் என்னன்னா நான் சேருற டீமோட எதுத்த டீம்காரன் ஒத்துக்கமாட்டான், இப்போ வந்தவன எப்படி பவுலிங் போட சேப்பீங்கனு. அப்புறம் ஒருவழியா நம்ம கேப்டன் வாதாடி ஜெயிச்சி நமக்கு பவுலிங் கொடுப்பாரு. ஒருபக்கம் இவங்க வாதாடிக்கிட்டு இருக்குறப்பவே மேட்ச் பாட்டுக்கு நடக்கும். அப்போதான் நம்ம திறமையைக் காமிக்க வேண்டிய நேரம், முள்ளுக்குள்ள விழுந்த பந்த எடுக்குறது, கீப்பர் பின்னாடி விட்ட பந்த எடுக்குறதுனு உதவி பண்றது. அப்போ ஒரு மெல்லிய இரக்கம் நம்மள பாத்து உருவாகும் எதிர்த்த டீமுக்கு. அப்படியே உள்ள ஐக்கியம் ஆகிட வேண்டியது தான்.
கொஞ்ச நாள் முன்னாடி ஒரு ரெசார்ட்க்கு போயிருந்தேன் குடும்பத்தோட. அவ்ளோ அழகான பெரிய கிரிக்கெட் கிரவுண்ட். நடுவுல பிட்ச் செம்மண்ல அவ்ளோ சூப்பரா இருந்தது. கூட வந்திருந்த நண்பரும் நானும் அங்க வச்சிருந்த ஸ்டம்ப், பேட் மற்றும் பந்து லாம் எடுத்துக்கிட்டு ஆடலாம்னு போனோம். நான் பேட்டிங் பண்ண அவரு பவுலிங் போட, மொதப் பந்தே கீப்பருக்கு பின்னாடி போயிடுச்சு. அப்புறம் தான் நியாபகம் வந்தது அங்க கீப்பரே இல்லனு. இந்த நேரம் தான் ஊருல விளையாண்ட அந்த நியாபகங்கள் கண்ணுமுன்னே வந்து போச்சு. எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்னு.
அப்போ அவ்ளோ பேரு விளையாட ஆள் இருப்போம், ஆனா விளையாட நல்ல இடம் இருந்ததில்ல. இப்ப விளையாட இடம் கூட கிடைக்குது (இல்லாட்டாலும் காசு குடுத்தா விளையாட இடம் தர்றாங்க) ஆனா நம்மகூட சேர்ந்து விளையாட ஆள் இல்லாம தவிக்கிறோம். இது நான் ஸ்கூல் படிச்ச காலத்த ஒப்பிட்டுப் பார்த்தா தோணுது. ஆனா இப்போ உள்ள தலைமுறையினர யோசிச்சுப் பாத்தா அவங்கலாம் விளையாட ஆள் தேடுறாங்களானு சந்தேகமா இருக்கு.
அன்னைக்கு அந்த செம்மண் கிரவுண்ட்ல விளையாடுறப்போ நானும் நண்பரும் பேசிக்கிட்டோம் விளையாடுறதுக்கு என்ன பண்ணலாம் அப்படினு திடடம் போடுவோம்னு. கூடிய விரைவில் அது கைகூடுச்சு.
(கிரிக்கெட் நினைவுகள் இன்னும் வலம்வரும்...)
- மைக்கேல்ராஜ். ஞா



