Thursday, 2 May 2024

மறக்க முடியாத போட்டி

 ஆஸ்திரேலியா  - இந்தியா / 3வது டெஸ்ட்  - பெர்த் - ஜனவரி 16-19

சிட்னி டெஸ்டில் நடந்த மோசமான அம்பயர் முடிவுகள், நிறவெறி தாக்குதலால் இந்திய அணி வீரர்கள் வெறி கொண்டு இருந்தனர். ரசிகர்களும் உணர்வு பூர்வமாக பொங்கி எழுந்தனர். இந்த நிலையில் தான் தொடங்கியது பெர்த் டெஸ்ட்.

ஆஸ்திரேலியர்களின் வியூகமே எதிரணியை உசுப்பேத்தி ஆக்ரோஷமாக ஆட வைத்து எளிதாக வீழ்த்திவிடுவது.

கும்ளே தலைமையிலான இந்திய அணி ஆக்ரோஷமாக இருந்தாலும் விவேகத்துடன் களமிறங்கியது. சேவாக்கிற்கு முதல் முறையாக அந்தத் தொடரில் ஆட வாய்ப்பு கிடைத்தது. ஜாபர் - சேவாக் கூட்டணி நிதானமாக ஆடினாலும் முதல் 12 ஓவர்களில் ஒரு ஓவரைக் கூட மெய்டன் ஆக்கவில்லை.

உணவு இடைவேளையின் போது டிராவிட் சச்சின் களத்தில் இருந்தனர். தேனீர் இடைவேளைக்கு பின் சச்சின், கங்குலி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 93 ரன்கள் அடித்த டிராவிட் பொறுமையை தவறவிட்டு ஆட்டம் இழந்தார். புதிய பந்து வந்தபின் லட்சுமண் வீழ்ந்தார்.

முதல் நாள் முடிவில் இந்திய அணி 297 ரன்களுக்கு 6 விக்கெட் வீழ்ந்து இருந்தது.பெர்த் மைதானத்தில் நாலு வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு இந்த ரன்குவிப்பு, ஆஸ்திரேலியர்களை மனதளவில் தாக்கியது. இர்பான் பதான் மற்றும் தோனி களத்தில் நின்றனர்

இரண்டாம் நாள் துவக்கத்தில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த நினைக்க, தோனி - இர்ஃபான் அடித்தாட நினைக்க எதுவும் சாதகமாக நிகழவில்லை. இறுதியாக 328 என்ற நிலையில் தோனி 19 ரன்களில் அவுட்டாக அடுத்தடுத்த ஓவர்களில் பதான், கும்ளே, ஆர்பி சிங்கை அவுட்டாக்கியது ஆஸ்திரேலியா.

இந்தியா, பந்து வீச்சை சிறப்பாக துவக்கியது. அறிமுக வீரர் ரோஜர்ஸ் மற்றும் ஜேக்ஸை ஒரே ஓவரில் வீழ்த்தினார் பதான். ஆர்பி சிங் தனது பங்கிற்கு ஹசியை டக் அவுட் ஆக்கினார்.

பாண்டிங் மற்றும் கிளார்க் பெரிய அளவில் நிலைக்கவில்லை. சைமன்ட்ஸ் - கில்கிறிஸ்ட் நிலைத்து நின்று ஆடினர். கும்ளே சைமன்ட்ஸை வீழத்த, அதற்கு பிறகு கில்கிறிஸ்ட் அவுட்டாக, ஆஸ்திரேலியா 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா 118 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை துவக்கியது. 10வது ஓவரில் ஜாபர் அவுட்டானார். இர்ஃபான் பதான் மூன்றாவது வீரராக களம் இறங்கினார். இந்தியா இரண்டாம் நாள் முடிவில் 52 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்திருந்தது.

 


மூன்றாம் நாளில் முதல் இன்னிங்சில் அரை சதம் அடித்த டிராவிட் சச்சின் சொதப்பினர். சேவாக் 43, பதான் 46, தோனி 38 என அவுட் ஆனாலும் இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்பெஷலிஸ்ட் லட்சுமன் அரை சதம் அடித்தார். ஆர்பி சிங் 30 ரன் அடிக்க இந்தியா 294க்கு ஆல்அவுட் ஆனது.

மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா துவக்க ஆட்டக்காரர்களை இழந்திருந்தது. ஹசி - பாண்டிங் சிறப்பாக ஆடினர். பாண்டிங் விக்கெட் இஷாந்த் ஷர்மா வீழ்த்தினார். ஹசியை ஆர்பி சிங் வீழ்த்தினார். சைமன்ட்ஸ் மற்றும் கில்கிறிஸ்ட் நிலைக்கவில்லை. கும்ளே பந்து வீச்சில் மாற்றம் கொண்டு வந்து சேவாக்கை பந்து வீச சொன்னார். சேவாக் கில்கிறிஸ்ட் மற்றும் பிரட் லீயை அவுட் ஆக்கினார்.

கிளார்க் நிலைத்து நின்று ஆட ஜான்சன் அவருக்கு உதவ ஆட்டம் கை மீறி போவது போல இருந்தது. கிளார்க் கும்ளே பந்தில் ஸ்டம்பிங் ஆக ஸ்டூவர்ட் கிளார்க், குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தார். புதிய பந்து கிடைத்த பின் ஸ்டூவர்ட் கிளார்க் மற்றும் டைட்டை அவுட்டாக்கி இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை ஒவ்வொரு வீரரும் தங்களது சிறப்பான பங்களிப்பை தந்தனர். பந்து வீசிய அத்தனை பேரும் விக்கெட் எடுத்தனர். சேவாக் வீழ்த்திய இரண்டு விக்கெட்டுகள் குறிப்பிடத்தக்கது. ஆர்பி சிங் அடித்த 30 ரன்களும் முக்கியத்துவம் வாய்ந்தது.

வெற்றிக்கு பின் கும்ளே ஸ்டம்பை தூக்கி வந்த காட்சியும், ஹர்பஜன் தேசிய கொடியுடன் மைதானத்தில் வலம் வந்த காட்சியும் கண்களில் நீர் வரவைத்தவை.

 

S. Palani Selvakumar

 

No comments:

Post a Comment

நானும் கிரிக்கெட்டும் - July 2025

அப்போலாம் டீம்ல ஆட இடம் கிடைக்கிறதே பெருசு. ஸ்கூல் விட்டதும் ஓடிவந்து வீட்டுல பையத் தூக்கி எறிஞ்சுட்டு மொத ஆளா சர்ச் மேட்டுக்கு ஓடுவேன். ஏ...